பாரதிதாசன் கவிதைகள்

₹375.00

Author Name

Bharathidasan

Description

எழுபத்துமூன்று ஆண்டுகள் இல்வுலகில் வாழ்ந்த புரட்சி கவிஞர் பாரதிதாசன், தம் வாழ்நாளில் எண்ணற்ற இனிய கவிதைகளை இயற்றித் தமிழ்கூறு நல்லுலகிற்கு அளித்துள்ளார்.
சம காலத்தில் வாழ்ந்த கவிஞருள் தன்னிகரற்றவராய்க் கவிஞர் பாரதிதாசன் திகழ்ந்தாலும், அவ்வப்போது கொண்ட கொள்கை மாற்றத்தால் இவர் கவிதைகள் அவற்றைப் பிரதி பலிப்பவையாய் உள்ளன.
தொடக்கக் காலத்தில் இவர் கவிதைகள் ஆன்மிகத்தைத் தூக்கிப் பிடிப்பவையாயும், தேசியத்தை – காந்தியத்தைக் காப்பவையாயும் உருவெடுத்தன.
தந்தை பெரியார் அவர்களின் கருத்தால் ஈர்க்கப்பட்ட பாரதிதாசன், தம் கவிதைகளை நாத்திகத்தைக் காக்கும் போர்வாளாகவும், திராவிட நாட்டை மீட்கும் போர் முரசாகவும் உருவாக்கினார்.
இவ்வாறு இவர் கவிதைகள் வெவ்வேறு பாடு பொருள்களால் ஆக்கப்பட்டிருந்தாலும் ‘பாரதிக்குப்பின் சிறந்த கவிஞன் பாரதிதாசன்’ தான் என்பதை இவரது கவியாற்றல் உலகுக்கு உணர்த்துகிறது.
குறுக்கிடும் கொள்கையை ஒதுக்கிவைத்து, கலைநயத்தோடு காண முயன்றால், பாரதிதாசனின் கவிதைத் தோப்பில் அரிய கவிதைக் கனிகள் பற்பல கனிந்து தொங்குவதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாய்ச் சில கனிகளைச் சுவைப்போம்.
உலக ஒற்றுமையை வலியுறுத்தும்,
“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு” எனத் தொடங்கும் பாடல், உலக நாடுகளின் அமைப்பான ஐ.நா. சபையின் இலட்சியப் பாடலாய் ஒலிக்க வேண்டிய ஒப்பற்ற பாடலன்றோ?
வாய்விட்டுச் சொல்ல இயலாத கைம்மைப் பெண்களின் துயரத்தை விளக்கும்,
“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே – இங்கு வேரிற்பழுத்த பலா”
என்னும் பாடல் கல்மனத்தையும் கரையச் செய்யாதோ!
காட்டினைக் கவிதை ஒன்றன் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார், கவிஞர்.
“முட்புதர்கள் மொய்த்தரை எங்கும்” எனத் தொடங்கும் பாடலை ஒருமுறை படித்தால் அது நம் நெஞ்சை விட்டு நீங்காது; காரணம்? காவடிச் சிந்தில் அப்பாடல் அமைந்துள்ளமையே ஆகும்.
பாரதிதாசன், பாரதியாரைப்பற்றி ஓரிடத்தில்,
“செந்தமிழ்த்தேனீ சிந்துக்குத் தந்தை” என்று பாராட்டுகிறார். அந்தப் பாராட்டு பாரதிதாசனுக்கு அப்படியே பொருந்தும் என்பதை இக்கவிதை நூலைப் படித்தபின் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
– பழனியப்பா பிரதர்ஸ்