திருக்குறள் எளிய உரை, நாமக்கல் கவிஞர் (Thirukkural Elia Urai, Namakkal Kavingar)

480.00

Description

முன்னுரை
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் உரையே பாடமாகப் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400) ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கெடுத்திருந்தார்கள். அதை ஒழுங்குபடுத்த மூலத்தின் ஏட்டுப்பிரதிகளைத் தேடி ஆராய்வதற்கே பரிமேலழகர் அரும்பாடுபட்டிருக்க வேண்டுமென்று அனுமானிக்க இடமிருக்கிறது. அதனால் உரைகளையும் ஆராய்ந்து மாற்றியமைக்க அவருக்கு அவகாசம் இல்லை போலும். எனவே அவருடைய உரைகளும் அநேக இடங்களில் திருவள்ளுவருடைய கருத்துக்கு ஒவ்வாதனவாகவும் தத்துவங்களுக்கும் சத்தியங்களுக்கும் முரண்பட்டனவாகவும் இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் வேறுபட்ட பொருத்தமான புது உரைகளைச் செய்திருப்பதே இந்நூலின் சிறப்பு. இதற்கு ஓர் உதாரணமாக ‘தவம்’ என்ற அதிகாரத்திலுள்ள பத்துக் குறள்களுக்கும் பரிமேலழகர் தந்துள்ள உரைகளோடு இதிலுள்ள உரைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புதுமை விளங்கும். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்ற பெருமை வாய்ந்த திருக்குறளுக்கு இந்தப் புது உரைதான் முடிவான உரையென்று சொல்லிவிட முடியாதென்றாலும், இதுவரையிலும் வெளிவந்துள்ள எல்லா உரைகளிலும் இந்தப் புது உரைதான் திருவள்ளுவருடைய கருத்துக்கு மிகவும் நெருங்கியதாக இருக்கிறதென்பது நிச்சயம். இதைக் கண்ணுறும் அறிஞர்கள் இது பரிமேலழகருக்குச் சிறுமை செய்வதாகச் சீற்றங்கொண்டுவிடாமல், அமைதியுடன் ஆராய்ந்து ஆதரிப்பார்களென்று வணக்கத்துடன் வேண்டிக்கொள்ளுகிறேன்.
வெ. இராமலிங்கன்