Description
சோழர் வரலாறு தெரிந்த நாளிலிருந்து, என்னுள் இராஜராஜன் மேல் ஓர் பற்று இருந்து வந்தது. உலக சரித்திரத்தில் வாழ்ந்த மன்னர்களில் கடல் கடந்து தேசங்கள் வென்று ஆண்ட மன்னர்களில் ஓர் முன்னோடி இராஜராஜன் என்ற பெருமை ஒரு சிகரமாய் என் மனதில் வளர்ந்து நின்றது.
முன் பிறவி அனுபவங்கள் வெறும் கட்டுக் கதைகள் என்று ஒரு புறம் பேசப்படுகிறது. என் சிறுவயது முதல் நான் கேட்டும் அறிந்தும் வந்த சில நிகழ்வுகள் வேறு விதமாய் இருந்தன. உலக அளவில் பல இடங்களில் மிகச் சிறிய வயதில், இசை, விஞ்ஞானம், கணிதம், விளையாட்டு, மொழியறிவு இவற்றில் வியப்பூட்டும் வித்தகத்தை வெளிப்படுத்திய பலருடைய நிகழ்வுகள் பரவிவந்தன. இதில் உண்மை இருக்கிறது என்ற முடிவை என்னுள் மேலோங்கி நிற்கச் செய்தன.
37 ஆண்டுகளே வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் ஒரு நடுத்தர வகுப்பில் பிறந்தவர். அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் பயின்றார். உலகமே வியக்கும் வண்ணம் அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஓர் ஆன்மீக உரையை ஆற்றினார்.
அவர் உருவாக்கிய கல்வி ஸ்தாபனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு அறிவாற்றலை கற்பிக்கின்றன. அவர்களில் பலர் அளப்பரிய சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றனர். இதை எந்த அரசாங்கமோ, பெரிய தொழில் ஸ்தாபனங்களோ கூட சாதித்தது இல்லை.
விவேகானந்தருக்கு இது எப்படி சாத்தியமாயிற்று? என்று ஆராய்ந்தால், அவர் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரால் மறுபிறப்பு எடுக்கச் செய்த செய்தி அறியவருகிறது.
இன்று பிராணாயாம பயிற்சி முறைகள் உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது! பிராணாயாம யோகத்தால் பல நோய்கள் பலருக்கு குணமாகப் படுவதை அனுபவத்தில் கண்டு வருகிறோம்! இதில் கற்றறிந்த பல மருத்துவ நிபுணர்கள் கூட ஏற்று அங்கம் வகித்து வருகின்றனர். மறுபிறவி எடுத்து வாழும் பல பிரபலங்களை, பிராணாயாம யோகிகள் இன்று, இனம் கண்டு கூறிவருகின்றனர்.
பல நோய் நிவாரணங்களின் பிராணாயாம தீர்வுகள் விஞ்ஞான ரீதியாக இன்று நிரூபணமாகி வருகின்றன. சங்ககால, சமீபகாலமாக விஞ்ஞானச் சான்றுகளோடு முற்பிறவி நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களை ஆழ்நிலைப்படுத்தி அறிந்து வெளியான சில நூல்களைப் படிக்க நேர்ந்தது.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இந்தியாவிலும் கூட ஆழ்நிலைப்படுத்தி முன்ஜென்ம நினைவு நிகழ்வுகளால் நிகழ்காலத்தில் நோயுற்ற சில நோய்களுக்கு தீர்வு கண்டு வருவது பற்றிய செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த செய்திகளின் அடிப்படையில் என்னுள் ஒரு கற்பனை ஊற்று பெருகியது. அந்த ஊற்றில் பிரவாகமாக மேலெழுந்து முன் நின்றாள் ‘குந்தவை தேவி’, சோழ இராஜராஜனின் தமக்கை.
இராஜராஜனும் அவன் முன்னோர்களும் கீழை நாடுகளில் காலூன்றி பல சாதனைகள் படைத்தனர். ஏராளமான பொன்னும், பொருளும் கொண்டு வந்து குவித்தனர். அவ்வகை பொருள் வளம் கொண்டு சோழ நாட்டின் வளத்தையும், பொருளாதாரத்தையும் வலுப்படுத்தினர். சேர, பாண்டியரை வென்று தம் படை பலத்தைப் பெருக்கினர். நான்கு திசைகளில் மட்டுமல்லாது கடல் கடந்தும் சென்று ஆட்சியை விரிவு படுத்தினான் இராஜராஜ சோழன், என்ற செய்திகள் பல நூல்களின் மூலம் கற்றறிந்தேன்.
என்னுடைய சிந்தனை இதில் ஆழ்ந்திருந்த காலத்தில் உலகம் முழுவதும் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவுகள் ஏற்பட்டு வருவதையும் அறிந்தேன். முக்கியமாக அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவுகள் பல தகவல் நுட்ப நிறுவனங்களின் பல்லாயிரக்கணக்கான வல்லுநர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கக் காரணமாகி வருகின்றன என்ற செய்திகளும் பரவின.
இராஜராஜனின் பொக்கிஷ சேமிப்புகள் என் கற்பனையில் மிகப் பெரியதாக வளர்ந்தன! இராஜ்ய பாரங்களில் இராஜராஜனுக்கு பெரிதும் உதவி வந்த ‘குந்தவை’, அமெரிக்காவில் பிறந்தாள்! என் கதை இதோ, ‘சோழர் கொடை’யாக பரிணமிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் என் கற்பனைச் சிதறல்கள் ஒரு முழு கதையாக உருவாகி என் வாழ்வில் நான் கண்டு கலந்து உறவாடியவர்கள் பலரின் நினைவுகள் கதையின் பாத்திரங்களாகப் பரிணமித்தனர். என் அனுபவங்கள் இக்கதைக் கருவிற்கு ஊக்கம் அளித்து போஷாக்கு சேர்த்து, இதோ உங்கள் கைகளில் ‘சோழர் கொடை’யாக தவழ்ந்து கொண்டிருக்கிறது!
கதையை முடித்து பத்து வருடங்களுக்கும் மேல் ஏதும் செய்யாமல் வைத்திருந்தேன்; மறந்தும் போயிருந்தேன்.
தற்செயலாக வெ.அ. ரமேஷ், ‘வார்’ என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் எனது நண்பரை சந்தித்தேன். அன்று அவர் ஆக்கம் அளித்துக் கொண்டிருந்த ஒரு நூலைப் பற்றிய கலந்துரையாடலில் இந்தக் கதையை பற்றிக் கூற நேர்ந்தது!
“இந்தக் கதையும் கருவாக்கமும் நன்றாக இருக்கிறதே! புத்தகமாகப் பதிப்பிக்கலாமே!” என்றார். கதையை அவரிடம் கொடுத்தேன்.
என் கதையை படிக்க ஆரம்பித்த மறுநாளே, ‘இதை நிச்சயமாக புத்தகமாக வெளியிட வேண்டும்’ என்று ஊக்கமளித்தார். அவர் ஆலோசனைப்படி திருத்தங்கள் நடந்தன. கதையின் வண்ணம் அழகுருவதை என்னால் உணர முடிந்தது.
அவருக்கு இருந்த பல அரிய பணிகளுக்கு நடுவில் எனது நட்பிற்காக தினமும் சில மணித்துளிகள் ஒதுக்கி, இரண்டு மாதங்களில் முழுக் கதையையும் சீராக்கி கணினியில் அச்சிட்டுக் கொடுத்துவிட்டார்.
ஒரு நட்பிற்கு நன்றி எவ்வளவு சொன்னாலும் போதாது! விலையிட முடியாத நட்பின் நீடிப்பும் நிரந்தரமும் மட்டும்தான் என்னால் என் காணிக்கையாக கொடுக்க முடியும்!
சோழர் கொடையை ஒரு ‘பொன்னேடாக’ பதிப்பித்த பெருமை அவரை மட்டுமே சாரும்!
என் கதைக்கு தேவையான ஒரு நல்ல ஓவியரை தேர்ந்தெடுத்து தருமாறு நண்பர் ‘வாரை’க் கேட்டிருந்தேன். தான் ஆக்கமாக்கி வரும் ஒரு சரித்திர நாவலின் ஆசிரியர் ஒருவர் ஆலோசனைப்படி நமக்கு வேண்டிய ஓவியங்களை கணினி தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கலாம், என்ற கருத்தைக் கூறினார்.
அமெரிக்காவில் வசிக்கும் என் பேத்தி ஷிவானியிடம் அது பற்றி கேட்டேன். உடனே, ‘செய்ய முடியுமே’ என்றாள். நான் கதையின் பல நிகழ்வுகளைக் கூறி அவற்றை ஓவியமாக்கித் தர கேட்டுக்கொண்டேன்.
தன் கல்வியைக் கல்லூரியில் பயின்று கொண்டு உலகம் தழுவிய பெரியதோர் நிறுவனத்தில் பயிற்சிப் பணியும் புரிந்து வருகிறாள். தினமும் 18 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கும் சிறுமி அவள். என் மீது கொண்ட அன்பால், அக்கறையுடன் என் கற்பனையில் உருவாகி எழுத்தான ஒவ்வொரு நிகழ்வையும் என் உளம் புகுந்து அவற்றை நேரில் கண்டு படம் பிடித்தது போல் அற்புதமாகவும் நேர்த்தியாகவும், ஒவ்வொரு நாளும் ஓவியங்களை உருவாக்கி அனுப்பினாள். அவளுக்கு நான் நன்றி சொன்னாலும் அதை அவள் வாஞ்சையுடன் ஏற்க மாட்டாள்.
அவள் பிறந்ததிலிருந்து இந்த 20 ஆண்டுகளும் அவள் அறிவும் ஆற்றலும் நிறைந்த சமுதாயத்தின் ஒரு நல்ல மாற்றத்திற்கு ஏற்ற காரணியாய் வளர்ந்து திளைக்க வேண்டும், என்ற என் கனவுக்கும் கற்பனைக்கும் ஏற்ற ஓர் உயிர் ஓவியமாய் மிளிர்ந்து நிற்கும் அவளை பண்புமிகு தம்பதியர் மூலம் இவ்வுலகிற்கு தந்திட்ட என் அன்பு இறைவனின் பாதங்களில் என் சிரம் பதித்து நன்றி கூறுகிறேன். (Image Credits:
Images created using Google Gemini and ChatGPT).
மனநிறைவோடு கதைக்கு வேண்டிய ஓவியங்கள் அனைத்தும் சேர்த்து ஒரு புத்தகமாக தயாரானதும் ஒரு நல்ல பதிப்பகத்தை நண்பர் ‘வார்’ தேர்ந்தெடுத்து கூறினார்.
அரிய பல நூல்களை பதிப்பித்த பதிப்பகம், ‘பழனியப்பா பிரதர்ஸ்’, எழுத்துலகில் புதிதாக கால் பதிக்கும் என் கதையை பதிப்பிக்க ஏற்றுக்கொண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்றதொரு சிரத்தையுடன் ‘சோழர் கொடை’யைப் புத்தகமாக வடிவமைத்துக் கொடுத்த திரு. பழையவலம் பா. ராமநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இவர்களுடன் என் எழுத்துப் பயணம் மிகச் சிறப்பாக, இன்னும் பலவாக தொடர வேண்டுமென்று உளம் நிறைந்து விரும்புகிறேன்.
இன ஆர்வம், மொழி ஆர்வம், சமுதாய மேம்பாட்டில் என் உள்ளத்தில் உறைந்திருக்கும் அத்தனை அக்கறையையும் நான் ‘சோழர் கொடை’யில் பதித்திருக்கிறேன்!
வாசகச் சான்றோர்கள், ஏதாவது சில மணித்துளிகள் இந்தப் புதினத்தின் சிறப்பில் திளைத்து மீண்டால், ‘வானம் பார்த்த பூமி’யில் சில மழைத்துளிகள் கண்டு மகிழும் உழவனைப் போல் உவகை கொள்வேன்.
நன்றி. வணக்கம்.
– ஸ்ரீ கணேஷ்





