Description
மரியாதைராமன் – கதைகள்
‘கதைகளின் தாய் நிலம்’ என்று கொண்டாடப்படுகிற நம் பாரத தேசத்தில், விக்கிரமாதித்தனின் கதைகள், தெனாலிராமன் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள், பஞ்ச தந்திர கதைகள் எனப் பல்வேறு சிறந்த கதைகள் நிறைந்துள்ளன. இந்த வரிசையில் ‘மரியாதைராமன் நீதிக்கதை’யும் தற்போது இணைந்துள்ளது.
மரியாதைராமன் தெனாலி இராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவர்களுக்கு புலப்படாத நுணுக்கமான விஷயங்களையும் எளிதில் கூறிவிடுவார்.
ஒருசில வழக்குகளில் அரசர் அளித்த தீர்ப்புகளை தனது இளம் வயதிலேயே புத்திசாலித்தனமாகத் திருத்தி சரியாக தீர்ப்பு கூறியதால், ராமன் வசித்து வந்த, அந்த ஊர் மக்களால் ‘மரியாதைராமன்’ என விரும்பி அழைக்கப்பட்டார்.
மரியாதைராமனின் புத்திசாலிதனத்தை ஆராய்ந்த அரசர் தனது அரசசபையில் உதவியாளராக நியமித்துக்கொண்டார்.
வழக்கு என்றால், சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே கோணத்தில்தான் நீதிபதி ஆராய்வார். ஆனால், வழக்கு தொடுத்தவர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், சாட்சிகள் என யார் மீது சிறிதும் சந்தேகம் இல்லையோ அவரைப் பிடிப்பார் மரியாதைராமன். கிடுக்கியில் மாட்டுவதுபோல் இரண்டு மூன்று கேள்விகளைக் கேட்பார். இக்கேள்விகள் மூலம் அந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ரகசியம் வெளியே வந்துவிடும்.
மரியாதைராமன் கதைகள் என்பது, அரசசபையில் நீதிபதியாக இருந்த மரியாதைராமன் பற்றிய ஒரு நகைச்சுவை கலந்த கதைகள் ஆகும். கிராமங்கள், நகரங்களில் வாழும் சாதாரண மக்களின் பிரச்சனைகளுக்கு, தனது தீர்ப்புகளின் மூலம் தேவையான நீதியை வழங்கினார். மரியாதைராமனின் தீர்ப்புகள் அனைத்தும் வாய்மொழிக் கதைகளாகவும், அறிவுநுட்பக் கதைகளாகவும் புகழ்பெற்ற கதைகளாகவும் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.
நமது சிறுவர்களுக்கு நீதியை தெரிவிப்பதிலும், கதைகள் மூலம் நேர்மை, நியாயம், நீதி என பல கருத்துகளை எடுத்துக்கூறும் விதமாக வண்ணப்படங்கள் நிறைந்த, 6 கதைகளை உள்ளடக்கிய ‘மரியாதைராமன் கதைகள்’ என்னும் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை பள்ளி மாணவர்கள் படித்து பயன்பெற வேண்டுகிறோம்.
– பழனியப்பா பிரதர்ஸ்




