பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும் (வண்ணப் படங்கள்)

120.00

Description

பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும் – கதைகள்

‘கதைகளின் தாய் நிலம்’ என்று கொண்டாடப்படுகிற நம் பாரத தேசத்தில், விக்கிரமாதித்தனின் கதைகள், தெனாலிராமன் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள்‌, பஞ்ச தந்திர கதைகள், மரியாதைராமன் நீதிக்கதைகள் எனப் பல்வேறு சிறந்த கதைகள் நிறைந்துள்ளன. இந்த வரிசையில் பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும் தற்போது இணைந்துள்ளது.
“பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும்” என்பது வீரமாமுனிவர் எழுதிய நகைச்சுவைக் கதை. இதில், பரமார்த்த குரு என்ற ஒரு குருவும், மட்டி, மடையன், பேதை, மூடன், மிலேச்சன் என்ற ஐந்து மந்தமான சீடர்களும் சேர்ந்து செய்யும் செயல்கள் நகைச்சுவையாக, படக்கதைகள் மூலம் இந்நூலில் விவரிக்கப்படுகின்றன.
துணி தைக்கும் ஊசியைப் பார்த்திராத சீடர்கள் ஊசியை வாங்கிவருவதற்காக கடைத்தெருவுக்குச் செல்கிறார்கள். கடைக்காரர் துணி தைக்கும் ஊசியைத் தருகிறார். ஆனால் சீடர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். தங்களது குரு மிகப் பெரியவர், அதனால் அவர் வாங்கி வரச்சொன்ன ஊசியும் மிகப்பெரியதாக இருக்கும் என நினைத்த சிஷ்யர்கள் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்தார்கள். கடைக்காரரும் சிஷ்யர்களை சமாளிக்க இயலாமல் பனைமரத்துண்டு ஒன்றைக் காண்பித்து இதுதான் நீங்கள் கேட்ட மிகப்பெரிய ஊசி என அதை அவர்களிடம் விற்றுவிடுகிறார். ஐந்து சிஷ்யர்களும் சேர்ந்து அதை மடத்திற்கு தூக்கி வந்து குருவிடம் தருகின்றனர்.
தாங்கள் பார்த்திராத ஒரு பொருளைப் பற்றி முழுவதும் தெரிந்தது போல் நினைத்துக்கொண்டதால், குளக்கரையில் நிற்கும் குதிரையின் பிரதிதான் தண்ணீரில் தெரிகிறது என அறியாத சீடர்கள் தூண்டில் மூலம் குதிரையை பிடிக்க நினைக்கிறார்கள்.
காட்டில் குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தபோது அதன் அருகில் விளைந்திருந்த பூசணிக்காயை குதிரை முட்டை என நினைத்து வாங்கி வருகிறார்கள் சீடர்கள்.
ஆற்றையும் ஆற்று நீரோட்டத்தையும் பற்றி அறிந்திராத குரு, ஆற்றுக்குள் இறங்கினால் ஆறு தங்களை விழுங்கிவிடும் என்ற தவறான கருத்துடன் ஆறு தூங்குகிறதா அல்லது விழித்திருக்கிறதா என அறிந்துவர சீடனை அனுப்பினார். சிஷ்யன் ஆற்று நீரில் கொள்ளிக்கட்டையை வைத்துப் பார்த்து ஆறு விழித்திருக்கிறது என்று குருவிடம் கூறுகிறான். அதனை நம்பிய குரு தனது வெளியூர் பயணத்தின்போது ஆற்றைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
பரமார்த்த குருவும் அவரது ஐந்து சீடர்களும் செய்யும் செயல்கள் மூலம், அந்த காலகட்டத்து சமூகத்தின் மூடநம்பிக்கைகள், அறியாமை மற்றும் குருட்டுத்தனமான நம்பிக்கைகள் பற்றிய விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
முட்டாள், மூடனாக ஐந்து சீடர்களைப் பெற்ற பரமார்த்த குருவும், அவரது சீடர்களும் செய்யும் செயல்கள் நமக்கு சிரிப்பைத் தருகின்றன. இந்நூலில் மொத்தம் ஐந்து கதைகள் உள்ளன. இக்கதைகளைப் படிக்கும் பள்ளி மாணவர்கள் சமயோஜிதமாக செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தில் இந்நூலை வெளியிடுகிறோம்.
– பழனியப்பா பிரதர்ஸ்