Description
தெய்வச் செந்தமிழ்த் திருநாட்டில் தோன்றித் துறவறம் வளர்த்த பெரியாருட் சிறந்தவர் இருவர். ஒருவர் பட்டினத்துப்பிள்ளையார்; மற்றொருவர் அன்னார் சீடர் பத்திரகிரியார். பட்டினத்தார் என்னும் பெயரைச் சிலர் பட்டணத்தார் என்று சொல்கிறார்; எழுதுகிறார். அது தவறு. இவ்விரு பெரியார் துறவு நிலையை ஸ்ரீதாயுமான சுவாமிகள் “பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் – ஆருந் துறக்கை யரிதரிது” என்றும், “ஒட்டுடன் பற்றின்றி யுலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ” என்றும் விதந்தோதி யிருத்தல் காண்க. இத்துறவறத்தார் இருவரும் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வதிந்திருக்க வேண்டுமென்று ஆராய்ச்சிக்காரர் கூறுப.
இவ்விருவருள் பட்டினத்தடிகள் அருளிய பிரபந்தங்களுள் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் இவ்வைந்தும் பதினொராந்திருமுறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன; ஏனைய பிரபந்தங்கள் பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டு என்னும் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றன. மற்றப் பத்திர கிரியார் திருப்பாடல்கள் மெய்ஞ்ஞானப் புலம்பல் எனவும், பத்திரகிரியார் புலம்பல் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரகிரியாரே விநாயக வாழ்த்துள் “முத்தி தருஞான மொழியாம் புலம்பல் சொல” என்றோதியிருத்தல் காண்க.
பட்டினத்தடிகள் அருளிச்செய்த பிரபந்தங்களுள் பதினொராந்திருமுறையில் அடங்கியுள்ள பாடல்களையும்,
திருப்பாடற்றிரட்டில் அடங்கியுள்ள பாடல்களையும் ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கின், இரண்டையும் ஒருவர் பாடியிருப்பரோ என்ற ஐயம் ஆராய்வோருக்கு நிகழ்ந்தே தீரும். அவ்வைய நிகழ்ச்சி கொண்டு இரண்டு பட்டினத்தார் வாழ்ந்திருக்கவேண்டுமென்று சிலர் கூறுகிறார். அன்னார் கூற்றை வலியுறுத்தப் போதிய சான்றுகள் இந்நாள்வரை கிடைக்கவில்லையாயினும், சொற்பொருள் நடைகளை உற்று நோக்குழி ஐய நிகழ்ச்சிக்கு வழி உண்டென்றே தோன்றும். அதைக் குறித்து ஈண்டு ஆராய நான் புகவில்லை.
இப்பட்டினத்தார் திருப்பாடற்றிரட்டுக்கும், பத்திர கிரியார் புலம்பலுக்கும் பொழிப்புரையும் விருத்தியுரையும் வரையுமாறு, இற்றைக்குச் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் அமரம்பேடு அரங்கசாமி முதலியார் அவர்கள் குமாரர் – சென்னைப் பூமகள் விலாச அச்சுக்கூடத் தலைவர் ஸ்ரீமான் முத்துவடிவேல் முதலியார் என்னைக் கேட்டனர். அவர் கேட்டவாறே விரைவாக உரை வரைந்தளித்தேன். அப்பொழுது மிக விரைவாக எழுதப்பட்ட உரையடங்கிய இந்நூல், பத்தாண்டு உறங்கி, இப்பொழுது முதன்முறை அச்சுவிமானமேறிற்று. இதற்குக் காரணம் ஐரோப்பா யுத்தத்தால் நேர்ந்த காகித விலையேற்றமென்று வெளியிட்டோரால் சொல்லப்பட்டது.
பொழிப்புரை பெரிதும் மூலத்தைத் தழுவியே எழுதப்பட்டது. விருத்தி, பாடல்களிலுள்ள பல ஐயங்களைப் போக்குங் குறிப்போடு எழுதப்பட்டது. இந் நூலை வெளியிடுவோர் கோலிய வரம்புக்குள் நின்று உரை எழுதப் பட்டது என்பதைத் தமிழ் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உரையில் தெரிந்தும் தெரியாமலுங் குறைகள் நிகழ்ந்திருக்கலாம். அவைகளை மன்னிக்குமாறு தமிழ்ப் புலவர்களை வேண்டுகிறேன்.
– திரு.வி.க.






