சிந்துபாத் கதைகள் (வண்ணப் படங்கள்)

120.00

Description

சிந்துபாத் – கதைகள்

‘கதைகளின் தாய் நிலம்’ என்று கொண்டாடப்படுகிற நம் பாரத தேசத்தில், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள்‌, பஞ்ச தந்திர கதைகள், மரியாதைராமன் நீதிக்கதைகள் எனப் பல்வேறு சிறந்த கதைகள் நிறைந்துள்ளன. இந்த வரிசையில் பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும் என்னும் படக்கதை நூலும் தற்போது இணைந்துள்ளது.
பல ஆண்டுகட்கு முன்பு அரபு மொழியில் எழுதப்பட்ட கதையே ‘அரபியன் டிலைட்’ எனும் கதை. அதாவது 1001 இரவுகள் தொடர்ந்து கதைகளைக் கூறி மன்னர் ஷாரியரிடம் இருந்து தன் உயிரைக் காத்துக்கொண்ட ஷாரஜாத் என்ற ஓர் அரசியைப் பற்றிய கதையே இது.
கதை சொல்வதும், கதை கேட்பதும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஓர் அற்புதக் கலை. கதைகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன. பல நல் ஒழுக்கங்களை அறியவும், மொழி ஆளுமை அதிகரிக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் கதைகள் உதவுகின்றன.
ஹாரிபாட்டரைப் படைத்த ஜே.கே. ரோலிங் தனது சிறு வயதில் மிகவும் விரும்பிப் படித்த புத்தகம் என இந்த அரபியன் டிலைட்ஸ் கதைகளைக் கூறுவார். இதில் அலிபாபா, அலாவுதீன், சிந்துபாத் எனப் பல கதைகள் அடங்கியுள்ளன.
‘அரேபிய இரவுகள்’ கதைகளின் ஒரு பகுதியாக உள்ள சிந்துபாத்தின் கடல் பயணம் பற்றிய சிறுகதைகளை இளஞ்சிறார்கள் படித்து மகிழ்வதற்காக படக்கதையாக உருவாகியுள்ளது இந்நூல். யார் அந்த சிந்துபாத்? அவனுடைய கடற் பயண அனுபவங்கள் என்ன? சிந்துபாத் சாகஸங்கள் என்ன? என்பதை இந்நூலில் உள்ள கதைகளைப் படிக்கும்போது நீங்கள் அறியலாம்.
பாக்தாத் (பகுதாது – ஈராக் நாட்டின் தலைநகர்) நகரில் ஆயிஷா, ஆஸிம் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். ஆஸிம் ஒரு வியாபாரி. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப அவர் பல நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்து பெரும் செல்வந்தனாகத் திகழ்ந்தார். அவரது ஒரே மகன் சிந்துபாத்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு தானும் கடல் பயணம் செய்ய ஆசை கொண்ட சிந்துபாத் தனக்காக ஓர் ஆடம்பரமான கப்பலை உருவாக்கி அதில் தனது நண்பர்களுடன் கடல்பயணம் மேற்கொண்டு வியாபாரம் செய்தான்.
சிந்துபாத் செல்வந்தராக இருந்தபோது தான, தருமம் போன்றவற்றால் தந்தையின் சொத்தையும், தான் சம்பாதித்த அனைத்தையும் இழந்தான். மீண்டும் கடலில் பயணம் செய்ய வியாபாரம் மேற்கொண்டபோது, பல ஆபத்துக்களைச் சந்தித்து சாகஸங்கள் பல புரிந்தான். கடல் அசுரர்கள், மர்மத் தீவுகள், அரிய ரத்தினங்கள், விநோத ராட்சஸப் பறவைகள், விசித்திரமான மனிதர்கள், கடல்மீன்கள் போன்றவற்றைச் சந்தித்து, பல சாகசங்கள் செய்து, மீண்டும் பாக்தாத் நகருக்கு செல்வந்தராக சிந்துபாத் திரும்பி வரும் கதைகளின் சில பகுதிகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஏழு முறை கடற் பயணங்களை மேற்கொண்டு, பல ஆபத்துகளைக் கடந்து, ஒவ்வொரு முறையும் செல்வத்தைப் பெருகி பாக்தாத் திரும்பும் சிந்துபாத்தின் இந்தக் கதைகள், விடாமுயற்சி, தைரியம், நல்லொழுக்கம், கொடைத் தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்துகின்றன.
பள்ளி மாணவர்கள் இந்த புத்தகத்தைப் படித்து பயன்பெற வேண்டுகிறோம்.
– பழனியப்பா பிரதர்ஸ்