Description
முன்னுரை
என் மனவானில் …
வணக்கம் நண்பர்களே!
இந்த நூலை நான் எழுதுவதற்கு முன்பே இதிலுள்ள சில கட்டுரைகள் என்னை ஆழ்ந்து எழுத ஆரம்பித்துவிட்டன. ஆன்மிக நோக்கில் என்னை நானே பகுத்தாய்ந்து கொள்ள வைத்துள்ளன. நான் யார் என்று சிந்திக்க வைத்தவை வாசகர்களையும் அதற்கான முன்னெடுப்பிற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் எனக்கு வழங்கி உற்சாகப்படுத்துகிறது. எந்த ஒரு எழுத்தும் தான் பிறக்கும்போதே தனக்குரிய வாசகனையும் பிறக்க வைத்துவிடுகிறது என்பதுதான் சத்தியம். அப்படிப்பட்டவர்களை மட்டுமே சென்று அடைகிறது ஒவ்வொரு எழுத்தும்.
தமிழ் மொழியின் இனிமையை, தேனைப்போன்று சுவைத்து, சுவைத்துப் பருகி இன்புற்ற மகாகவி பாரதியின் சொற்கள் நித்தியமானவை.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப் போல்
இனிதாவது எங்கும் காணும்”
என்ற சொற்கள் நம்மை மயக்க நிலைக்குத் தள்ளக் கூடியவை என்றாலும் அது மிகையில்லை. சங்க காலம் தொட்டு இன்றைய நவீன தமிழ் இலக்கியங்கள் வரை பெரும்பாலானவை அனைத்தும் நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளவை. புதிய சிந்தனைகளைத் தூண்டி, வாசகரின் வாசிப்புப் பசியையும், தேடலையும் நிறைவு செய்யக்கூடிய படைப்புகளே மக்கள் மனதில் நிறைந்து நிற்கின்றன. நமக்கென்ற வாழ்க்கையில் அதிகம் வலிகளைச் சுமக்கும் தருணங்களில் அதற்கான தீர்வுகளையே மனம் நாடுகிறது. பக்தி இலக்கியங்களின் தேவையும் இங்குதான் உருவாகிறது. எப்போதும் சிறந்ததையே நாடுவோர், சிறப்பான ஒன்றுடன்தானே போட்டி போடவேண்டியுள்ளது. வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்தாலும், தவறுகளிலிருந்து பாடம் படிக்கவும், அச்சமும், வருத்தங்களும் நம்மை வீழ்த்திவிடாமல், வெளிநடப்பு செய்யாமலும், முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நகரவேண்டும். வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழ்வதைக்காட்டிலும், ஒரு நல்ல குறிக்கோளுடன், ஒரு நல்ல அடையாளத்தையும் உருவாக்கவும் முயல்வதே முக்கியம் என்பதையும் உணர வேண்டும்.
வாழ்க்கையில் நாம் அனைவருமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை மட்டுமே விரும்புகிறோம். ஆனால் முழுமையான வாழ்க்கை என்பது கடினமான பொழுதுகளையும் கூட அரவணைத்துச் செல்வதுதானே.. நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றைக் கண்டு ஏன் அஞ்சி ஒதுங்க வேண்டும். நாம் எப்பொழுதுமே, மகிழ்ச்சி, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், சுய மரியாதை போன்றவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, நம்முடைய வாழ்க்கையின் கடினமான பொழுதுகளை கையாள்வதில் சரியான பயிற்சியின்றி கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை முழுமையடையச் செய்வதை கோட்டைவிட்டு விடுகிறோம்..
உணர்ச்சி, அறிவு என்னும் இரண்டும் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை. இந்த போராட்டத்திலிருந்து மீண்டு வரும் பாதையை நமக்கு அருள்வதுதான் பக்தி நெறியின் ஆகச்சிறந்த பயன்.
நன்றி.
– பவள சங்கரி திருநாவுக்கரசு





