Description
இந்நூலின் பக்கங்களில் காணப்படுவது. ஒரு பெரிய திரைச்சீலையில் தீட்டப்பட்டிருக்கும் வார்தைகளாலான வண்ணப்படமாக அமைந்துள்ளது. கோரமண்டலக்கரையின் சரித்திரத்தின் பகுதிகளைச் சிரத்தையுடன் எழுதி, அதில் போர்ச்சுகீசியர்களின் சாந்தோம் வரவிலிருந்து ஆரம்பமாகிறது. புனித ஜார்ஜ் கோட்டை நிர்மாணிக்கப்பட்டதும் அது வளர்ந்த விவரமும் கூறப்பட்டுள்ளன.
வணிகம், மதம் மற்றும் ஜாதி பேதங்கள் பற்றிய விவரங்களைக் காட்டுகையிலும் மதராசப்பட்டினத்துப் பஞ்சங்களையும் அடிமை வியாபாரத்தையும் குறித்து விவரிக்கையிலும் அவரது சரித்திரத் தேடல் நன்றாகவே தெரிகிறது. ஆங்கிலேயர்களும் இந்நகரத்து இந்தியப் பிரமுகர்களும் இந்நகரத்திற்கும் தென்னகரத்திற்கும் செய்த பெரும் சேவையை எடுத்துக் கூறுகையில் அவர் துபாஷிகளையும் அவர்கள் சேவைகளையும் நன்கு விவரித்துள்ளார். இந்திய நாட்டின் நிகராண்மை, நில அளவை, கல்வி முறை, அச்சுப்பணி, வானசாஸ்திரம் வங்கி முறை மற்றும் மருத்துவம் முதலான சேவைகளுக்கு எவ்வாறு, மெட்ராஸ் முன்னோடியாக அமைந்தது என்பதை வலியுறுத்தி சொல்கிறார். கற்பவர், ஆய்வாளர் மற்றும் சரித்திரத்தில் ஈடுபாடுள்ள சாதாரண வாசகர் எல்லோர்க்குமே அவர்களது கவனத்தை ஈர்க்கும் முறையில் நரசய்யா தயாரித்துள்ள நூல் இது. அவர்களெல்லோரும் இந்நூலைப் படிக்க நேர்ந்தால் அதுவே இந்நகரத்தின் சரித்திர சேவைக்கு நரசய்யா செய்துள்ள பெரும் தொண்டாக அமையும்.