Description
மகாகவி சுப்ரமணிய பாரதியார் (1882 – 1921)
கவிஞர், நவ கவிதை உரைநடை முன்னோடி, விடுதலைப் போராட்ட வீரர், பத்திரிகையாளர்
பிறப்பு : 11.12.1882 (எட்டயபுரம்- தூத்துக்குடி மாவட்டம்)
மறைவு : 12.09.1921 (சென்னை)
பதினோராம் வயதில் எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் சபையில் பாரதி பட்டம். திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பு. அலகபாத் பல்கலைக் கழகத்தில் பட்ட நுழைவுப் படிப்பில் தேர்ச்சி. 1904இல் மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதர். பின்னர் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவியாசிரியர். சக்கரவர்த்தினி மாதப் பத்திரிகையில் ஆசிரியர். 1906 இந்தியா வாரப்பத்திரிகையின் பொறுப்பாசிரியர். பால பாரதா ஆங்கிலப் பத்திரிகைத் தொடக்கம். முதல் கவிதை நூல் ஸ்வதேச கீதங்கள் 1908இல் வெளியாகிறது. 1908 இந்தியா பத்திரிகையின் அதிகாரபூர்வ ஆசிரியர் என்ற நிலையில் பாரதிமீது ஆங்கில அரசாங்கம் கைது வாரண்டு பிறப்பிக்கிறது. புதுவைக்குத் தப்பிச் சென்று 1918வரை அங்கேயே இருந்தார். அரவிந்த கோஷ், வ.வே.சு. அய்யர் இவர்களோடு தொடர்ப்பு ஏற்படுகிறது. 1918 முதல் 1920 வரை கடையம் வாசம்.
நூற்றுக்கணக்கான சிறு கவிதைகளோடு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் ஆகிய தொடர் கவிதைகளையும் எழுதியுள்ளார். சின்னச் சங்கரன் கதை, ஞான ரதம், சந்திரிகையின் கதை போன்ற குறுங்கதைகளையும், பல குட்டிக்கதைகளும் எழுதியுள்ளார். தாகூரின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் பாரதியார்.
பாரதி வரலாற்றைப் பலர் எழுதியிருக்கிறார்கள். இதில் வ.ரா. எழுதிய ‘மகாகவி பாரதியார்’ என்ற வரலாற்று நூல், பல வகையில் சிறப்பானது. வ.ரா. எழுதுவதைப் படிக்கும்போது, பாரதி பக்கத்தில் நின்று நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதான உணர்வு ஏற்படுகிறது. அவர் நகைக்கும் ஒலி கேட்கிறது. பல சமயங்களில் நம்மோடு அவர் கை குலுக்குகிறார். பாரதி என்கிற மனிதரோடும் கவியோடும் மனம் கலந்து வாழ்ந்திருக்கிறார் வ.ரா. – பிரபஞ்சன்