Description
உங்கள் கைகளில் தவழும் ‘பவளம் தந்த பரிசு’ நூலில் ஐந்து கதைகள் உள்ளன. இவை எல்லாமே ‘பரிசு’ என்னும் தலைப்பில் முடிபவை.
‘பவளம் தந்த பரிசு’ கதையேதான்! மரங்களை உயிராக நேசிக்கும் மன்னனின் செயல்கள், அனுமதி பெறாது மரம் வெட்டிய பெற்ற தாய்க்கு அளிக்கப்படும் தண்டனை, உயிர்காக்கும் மருத்துவருக்கு அரசன ளிக்கும் பெருமைகள், பிறகு அதே மருத்துவரே அனுமதி பெறாது மரத்தை வெட்டிக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு, மன்னனிடம் சலுகை கிடைக்காததால் ஏமாந்து தண்டனை பெற்று, அதே மன்னனிடம் பகைகொண்டு காட்டில் வாழ்ந்ததுவரை….
கதை வலுவாய் இருந்து கருத்தும் இலட்சிய முள்ளதாக இருந்து, அவற்றைச் சுவையாகவும் கூறத்தெரிந்திருந்தால் எந்த நாட்டைச் சேர்ந்தவர் களையும் சொக்கவைக்க முடியும் என்னும் நம்பிக்கையை அளித்த பெருமைக்குரியவை, இதிலுள்ள ஐந்து கதைகளும். இவை எல்லாமே பின்னால் கோகுலத்தில் தக்க மாற்றங்களுடன் படக் கதைகளாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அவற்றையே படிக்கும் கதை வடிவில், தலைப்பு மாற்றங்களோடு இப்பொழுது இந்த நூலில் உங்களுக்காகத் தந்துள்ளேன்.
உங்களைப் போன்ற சிறுவருக்கு மட்டுமன்று, கதை கூறத் துடிக்கும் பெரியவர்களுக்கும் இவை இனிய விருந்தாகி மகிழ்விக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவற்றைக் கோகுலத்தில் வெளியிட்ட ‘கல்கி’ நிறுவனத்திற்கும், வழக்கம்போல் அழகிய நூல் வடிவில் கொண்டுவரும் பழனியப்பா பிரதர்ஸ் பொறுப்பாளர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றி.
அன்புடன்,
ரேவதி,