Description
ஈசாப் கதைகள்
கதை சொல்வதும், கதை கேட்பதும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஓர் அற்புதக் கலை. ஆனால் இன்று அக் கலை, தன் செல்வாக்கை இழந்து நிற்கிறது. பரபரப்பான இக் காலச் சூழலில் கதை கேட்பதற்குக் குழந்தைகளுக்கு நேரம் இருப்பது இல்லை. அவர்களை அன்போடு அரவணைத்துக் கதை சொல்லும் பொறுமையும் மூத்த தலைமுறையினர்க்கு இல்லை. கதைகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன. பல நல் ஒழுக்கங்களை அறியவும் உதவுகின்றன. மொழி ஆளுமை அதிகரிக்கவும் கதைகள் துணை புரிகின்றன. நினைவாற்றலை அதிகரிக்கவும் கதைகள் உதவுகின்றன.
உலகப் புகழ் பெற்ற கதைகளுள் முதல் இடத்தைப் பெறுவது ஈசாப் கதைகள் ஆகும். கதைகளுக்கெல்லாம் இதுவே முன்னோடி என்றே சொல்லலாம். வாய்மொழியாகச் சொல்லப்பட்ட இக்கதைகள் பின்னர் பல மொழிகளில் எழுதப்பட்டன. இக் கதையை எழுதியவர் ஈசாப் என்றே அழைக்கப்படுகிறார். அவரைப் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை.
கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்; சிறந்த கதை சொல்லி; இவரது கதைகளில் மிருகங்கள் பேசுவதால் குழந்தைகள் மகிழ்வது கண்கூடு. நமது பஞ்ச தந்திரக் கதைகளிலும் விலங்குகள் பேசுவதைக் காணமுடிகிறது. இவர் அடிமையாக இருந்தவர் என்று அறியமுடிகிறது.
இவரது கதைகள் எல்லாம் அளவில் சிறியவை; கதைகளில் நீதிக்குப் பஞ்சமே இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த இவரது கதைகளை இன்றைய சிறார் உலகு படித்து மகிழும் வகையில் எளிய நடையில் தந்துள்ளேன். வாருங்கள்! குழந்தைகளே! படித்து மகிழுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி நாகராஜன்