Description
திருமூலரின் வரலாறு திருத்தொண்டர் புராணத்திலே சுருக்கமாகவே சொல்லப்பட்டுள்ளது; இவருடைய காலமும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. திருமந்திர நூல் நீண்டகாலம் புதையுண்டிருந்து திருவாவடுதுறைக்கு வந்த திருஞான சம்பந்தராலே எடுத்துக் கொடுக்கப்பட்டது; அதன் பின்னே திருமடத்தோரால் அந்நூல் படித்துப் பாதுகாக்கப்பட்டது என்ற செய்திகளெல்லாம் இதுகாறும் ஏட்டிலே வெளிவராமலே முடங்கிவிட்டன.
இவற்றையெல்லாம் வெளிக்கொணர்ந்து இயம்ப வேண்டிய கடமை எனக்கு வாய்த்தது. திருமூலரைப் பற்றியும் அவருடைய நூலினைப் பற்றியும் அடியேனுக்கு இளமையிலேயே உணர்வும் உயர்ந்த எண்ணமும் உண்டு. இதுவும் அடிப்படையில் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே இருந்தது. இதனாலேதான் இந்த நூலினைப் படைக்க முடிந்தது.
‘திருமூலர் வாழ்வும் வாய்மொழியும்’ எனப் பெயர் பெறும் இந்நூல் முழுமையாக அவருடைய வரலாற்றையும் – அவர் படைத்த வாழ்வியல் – இறையியல் உண்மைகளையும் தெற்றென வெளிப்படுத்தும்.
நம் சான்றோர்கள் மக்கள் மனத்தில் பதிவு செய்வதற்காகவே உயர்ந்த கருத்துக்களையும் செய்திகளையும் பாடல்களிலேயே பதிவு செய்தார்கள். அந்த மரபிலேதான் நானும் பாடல்களிலே நூலினைப் பதிவு செய்து படைத்துள்ளேன். படிப்போர்க்குப் புரிதல் வேண்டி மிகவும் எளிமையான சொற்களையே கையாண்டுள்ளேன். காலத்தின் கடமை கருதியே பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து உரிய தமிழ்ச் சொற்களைப் பயனாக்கியுள்ளேன்.
இந்த நூலின் வாய்மொழியமுதப் பாடல்களின் கருத்துகளை விரைவாகத் தெரிந்து கொள்வதற்காகவே கட்டுரை போலத் தொள்ளாயிரம் அளவிற்கு மேல் பட்டியலிட்டிருக்கிறேன். இவையனைத்தும் பொன்மொழிகளாக மனப்பாடம் செய்யத்தக்கவையாகும். வரலாற்றுச் செய்திகளையும் தொடர்பான பிற கட்டுரைகளையும் (ஒரு நூலில் ஒன்பது நூல், தமிழ் எழுத்தும் சொல்லாட்சியும், அமுதம் அருந்துதல் என்றால் என்ன?, சாகாக்கல்வி ஒரு புதிய அறிமுகம், குழந்தைப் பிறப்பில் குறைபாடுகள் ஏன்? உண்மையான தாயும் தந்தையும், கருத்து அடைவு – வாய்மொழி அமுதம்) படித்துப் புரிந்து கொண்டு நூலுள்ளே நுழைய வேண்டும் என்பதற்காகவே அவற்றைத் தெளிவான உரைநடையிலே கொடுத்துள்ளேன்.
– புலவர் அடியன் மணிவாசகன்