அம்பிகை வந்தாள் எஸ்.ஆர். சுப்ரமணியம் (Ambigai Vanthal, S.R. Subramaniam)

230.00

Description

‘அம்பிகை வந்தாள்’ என்ற தலைப்பில் ஒன்பது பெண் தெய்வங்களையுப் பற்றி நான் அறிந்த வகையில் எழுதியுள்ளதை தெய்வ நம்பிக்கையில் ஆழமான பற்றுள்ள தமிழ் மக்களுக்கு தந்திட முயற்சி செய்துள்ளேன்.
இந்த வகையில் பூமிப்பந்தின் சுழற்சி, கோள்களின் இயக்கம், பொருள்களின் அசைவு, இயற்கையின் வனப்பு, பஞ்ச பூதங்களின் இயக்கங்கள் போன்ற அனைத்துக்கும் காரண காரியமாக நின்று மூலாதாரப் பொருளாக இருந்து வரும் அம்பிகை, அம்பாள், அம்மை, அம்மன் என்று பல்வேறு வகையில் தொழுதிடும் சக்தியே ஆவாள்.
ஆகவே ஆகவே சக்தியின் வடிவம் தான் இந்த உலகம். பூமிப் பந்தினைப் போன்று வானவெளியில் உலா வருகின்ற எண்ணிலடங்காக் கோள்களையும் நிலை குலையாது சுழல்வதிலிருந்து ஆட்டுவிக்கும் சக்தியும் இவளே!
ஆன்மிகம் மனிதர்களை அவர்கள் வாழும் சமுதாயத்தை முறைப்படுத்தி நெறிப்படுத்துகிறது என்பதுவும், புலன்களை தூய்மைப்படுத்தி பக்குவம் காண வைத்து மனம், மெய், மொழிகளால் நன்னெறிப்படுத்தி நல் வாழ்க்கை வாழ்ந்திட வழிவகை செய்கிறது என்பதுவும் தெய்வ நம்பிக்கை கொண்டோர்களின் மெய்யாகும்.
தமிழக வரலாற்றில் ஆன்மிகத்தை பல்வேறு காலங்களாக வகுத்து வழங்கியிருக்கிறார்கள். அவற்றுள் சங்கம் மறுவிய காலமும் ஒன்று. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலத்தை சங்ககாலம் என வகுத்துள்ளனர். எல்லாக் காலங்களும் ஒரே மாதிரி உயர்நிலையில் இருந்ததெனக் கூறிவிட முடியாது. அதே போன்று எல்லாப் பருவங்களும் இளவேனில் காலமும் இல்லை.
பிற்காலச் சோழர் காலத்தை பொற்காலம் எனப் பேசப்படுவது உண்டு. இலக்கிய வரலாற்றில் ஈடற்ற பொற்காலமாக விளங்கிய சங்ககாலத்து இலக்கியத்திலிருந்து அம்பிகை பல்வேறு விதமாகப் பேசப்படுகிறாள்.
சங்க காலத்தில் ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் இயற்கையையே தெய்வமாக வழிபட்டனர். கி.பி. 600 முதல் கி.பி. 850 வரை இருந்த பல்லவர் காலத்தில் பக்தி இலக்கியங்கள் வளர ஆரம்பித்தது. பக்தி பாசுரங்களால் மனித சமுதாயத்தையே மாற்றியமைத்தனர். அதன் தொடர்ச்சியாக வந்த பண்டைய தமிழ் இலக்கியங்களில் அம்பிகை குறித்து வெகுவாக தொகுக்கப்பட்டுள்ளதை அறியலாம்.
‘சக்தி’, அன்னையைத் தெய்வமாகக் கருதி காலம் காலமாக நாம் வழிபட்டு வருகிறோம். சாக்த சமயத்தின் முக்கிய தேவதையாக பராசக்தி விளங்குகிறாள். இந்த தெய்வமே சிவன், திருமால், பிரம்மா ஆகிய மூவருக்கும் முதல்வியாகக் கருதப்படுகிறாள்.
ஆதிசங்கரர் தாம் இயற்றிய ‘சௌந்தர்ய லகரியில்’ பராசக்தியானவள் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் (முக்தி தருதல்) ஆகிய ஐந்து தொழில்களையும் செய்வதாகக் குறிப்பிடுகிறார். அவளே ஆனந்த சொரூபிணி என்று வர்ணிக்கப்படுகிறாள்.
தேவி பராசக்தியின் ‘யோக பீடம் பூமி முதல் சிவன் முடிய முப்பத்தாறு தத்துவங்களை உள்ளடக்கியது எனப் பேசப்படுகிறது.
அதாவது ஒரே சக்தி பிரம்மத்தைச் சேர்ந்த பொழுது ‘பராசக்தி’ எனவும், சிவனைச் சேரும் போது
‘மகாமாயை’ என்றும், விஷ்ணுவைச் சேரும்போது ‘யோகமாயை’என்றும் அழைக்கப்படுகின்றாள்.
இந்த உலகம் அம்பிகையின் மறு வடிவமே ஆகும். இதன் வழிபாட்டைப் பற்றி வேத காலத்திலேயே குறிப்புகள் உள்ளன. நாம் வாழும் இவ்வுலகத்தில் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறாள்.
கல், நீர், மரம், மிருகம், மனிதர், தேவர் ஆகிய எல்லாரிடத்திலும் சக்தியில் வேறுபாடு இருந்த போதிலும், அந்தப் பராசக்தியே அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கிறாள் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.
சிவபுராணத்தில் உமை, தன்னைப் பரப்பிரம்மமாகவும் பேரொளியாகவும், பிரணவமாகவும், பரந்த இவ்வுலக மாகவும், காரண காரியமாகவும் இருப்பதாகக் கூறுகிறாள்.
சிவனது ஆற்றலுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது அன்னையின் சக்தி. உலகத்தின் ஆன்மாக்களின் இயக்கத்தின் அடிப்படை மூலமே இந்த சக்திதான் என்பது முழு நம்பிக்கை கொண்டதாக இருக்கிறது.
அத்தகைய அம்பிகை வடிவமானவள் சராசரங்களின் வடிவான படைத்தளித்தாள். அண்டங்களை
என்ற பிரம்மா, விஷ்ணு. சிவன் மும்மூர்த்திகளும் அவளிடமிருந்தே உண்டாயின. நுகரும் பொருள்கள் யாவும் அவளே உண்டாயின!
இன்னும் சொல்லப்போனால் சகலவிதமான உயிர்களும் அவளாலேயே உண்டாயின எனச் சொல்லலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இவளே
அன்னை அம்பிகை ஆவாள். பற்பல வித்தைகளாக விளங்குபவளும் இவளே ஆவாள்.
‘ஓம்’ என்ற சொல்லின் உட்பொருளும் இவளே! அம்பாளின் கையில் ஒரு வில்லும், ஐந்து அம்புகளும் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்த வில் கரும்பு வில். மன்மதனுக்குத் தான் கரும்புவில் உள்ளதை கண்டிருக்கிறோம்.
அம்பிகைக்கு எதற்காக என்ற சந்தேகம் எழலாம்!
கரும்புவில் அந்த மன்மதனுக்கே கொடுத்தவள் அம்பிகை தான்! கொடுத்தவள் விசயத்திலேயே அவன் அதனை பிரயோகித்த போது தான் அவன் அழிந்து போனான்.
அம்பிகையின் ஐந்து பூங்கணைகள் நம்முடைய ஐந்து புலன்களையும் மெல்லமெல்ல வசீகரித்து செயலற்றுப் போகும் படி செய்துவிடுகின்றன. ஆனால் இப்படி செய்வதால் துன்பமும் ஏற்படுவதில்லை !மாறாக, உயிர்களுக்குத் இவ்வுலக உணர்வினைத் தாண்டிய ‘அற்புத ஆனந்த பரவச நிலையே’ உண்டாகின்றது.
இவ்வாறு அம்பிகையானவள் தனது ஐந்து கணைகளாலும் நம்மைப் பாதுகாப்பதால், நாம் கவலைகளில் இருந்தும் பாசாங்களிலிருந்தும் விடுபட்டு ஒப்பற்ற பேரானந்தம் எய்துகிறோம்!
அம்பிகையின் கடைக்கண்ணுக்கே பெரும் சக்தி உண்டு. அதை மட்டுமே தியானிப்பவர்கட்குப் பெரும் செல்வமும், கல்வியும், ஞான நிலையும், இன்னும் பிறவும் கிடைக்கப் பெறுவார்கள் என்று சொல்கிறார் அபிராமபட்டர்.
அந்தச் சுலோகம் தான்,
‘தனம் தரும், கல்வி தரும்,
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்…’ என்பதாகும்!
ஆதிசங்கரரோ தேவியின் பாதாரவிந்தங் கட்கும் அந்த சக்தி எல்லாம் உண்டு என்று போற்றிப் புகழ்கிறார் !
அம்பிகையை எந்த மாதிரியாக நாம் தியானம் பண்ணுகிறோமோ அந்த மாதிரியான அருளை நாம் அடையலாம். தியான வடிவத்துக்கு ஏற்றாற் போல ஒரு நிறம், அற்புதமான ஒரு வடிவம்.
கலைமகளாகப் பார்த்தால் வெண்மை நிறம்!
பார்வதியாகப் பார்த்தால் பச்சை நிறம்!
இறுதியில் கண்டால், இவையெல்லாம் ஒரே சிவப்பாக இருக்கிற அந்த அம்பாளைப் போய் அடைகின்றன.
‘யோக’ நிலையின் உச்சநிலையில் இருப்பவர்களுக்கு இவ் வடிவங்கள் யாவும் தெரியும்.
வடிவமும், இந்த அம்பிகையானவள் நிறமற்ற தாக ஒளி வெள்ளமாக ‘பொழிந்து கொண்டிருக்கிற பரப்பிரம்மத்தோடு கலந்து விடுகின்றது என்று ஆதிசங்கரர் மேலும் சொல்கிறார்.
தமிழ்நாடு மட்டுமின்றி பாரதநாடு முழுவதும் அம்பிகையை பல்வேறு பெயர்களைக் கொண்டு வணங்கி வருகிறார்கள். இத்தகைய பெருமை கொண்டு வணங்குதலுக்குரிய அம்பிகையை குறித்து நான் எழுதியுள்ள நூல்தான் ‘அம்பிகை வந்தாள்” என்பதாகும்.
எனது இந்த நூலக்கு சிந்தனைக்குரிய அணிந்துரையை ஆர்வத்துடனும், அன்புடனும் எழுதியுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– நூலாசிரியர்: எஸ்.ஆர். சுப்ரமணியம்