Description
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமணத்தைச் சாக்கிட்டு நடைபெற்ற சிறுவர் இலக்கிய விழாவில் பங்கு கொள்ளத் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். என்னை அழைத்திருந்த நண்பர்கள் திருச்செந்தூருக்கும் அழைத்துச் சென்றனர். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில் திருப்பேரை என்ற ஊரிலும் ஒரு குழந்தைகள் நிகழ்ச்சியில் கதை கூற ஏற்பாடாகியிருந்தது. தமிழ் மணம் கமழ்ந்த அந்த ஊரில் குடி கொண்டிருந்த இறைவனது பெயர் மகர நெடுங்குழைக்காதர். ஆலயத்திற்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு நான் அதுவரை எங்குமே காணாத காட்சி ஒன்றைக் கண்டேன். எட்டு வயதுகூட நிரம்பாத சிறுவர்கள் திவ்யப் பிரபந்தங்கள் நாலாயிரத்தையும், எட்டு அணிகளாகப் பிரிந்து, இசையுடன், சொற்சிதைவின்றி இறைவனுக்குச் சாற்றிய பிரபந்த சாற்றுபடிக் காட்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று, பேசத் தெரித்த நாள் முதலே குழந்தைகளுக்குப் பிரபந்தங்களை மனப்பாடம் செய்து வைக்கும் பழக்கம் அந்த ஊரில் நிலவி வருவதை அறிந்துகொண்டேன். நான் எழுதும் நாவல்களுள் எதிலாவது அந்த நிகழ்ச்சியைப் பின்னணியாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
அன்று இரவு திருப்பேரையில் தங்கி, வயது முதிர்ந்த அர்ச்சகருடனும், ஆலய நிருவாகக் குழுவைச் சேர்ந்தவர்களுடனும் பேசிக்கொண்டிருந்தபோது ஊரின் பழஞ்சிறப்பை அறிந்துகொண்டேன். திருநெல்வேலியை ஆண்ட வடமலையப்ப பிள்ளை அந்த ஊரின்மீதும், குறிப்பாக அந்த ஊர் இறைவன் பேரிலும் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அறியும் வாய்ப்புக் கிடைத்தது.
திருச்செந்தூரில் முருகனைத் தரிசிக்க எடுத்துக் கொண்ட நேரத்தைவிட ஆலத்தைச் சேர்ந்த பகுதிகளைச் சுற்றிப் பார்க்கவும், ஆலய அலுவலகத்தில் உரையாடவும் எடுத்துக்கொண்ட நேரந்தான் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ற பயனும் கிடைத்தது. திருச்செந்தூர் டச்சுக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு, முருகன் கொள்ளை அடிக்கப்பட்டுக் கடலில் எடுத்துச் செல்லப்பட்டுப் பிறகு மீட்டு வரப்பட்ட செய்தியை நான் அறிந்துகொண்டேன். என்னுடைய நாவலுக்கு ஏற்ற தகவல் எனக்குக் கிடைத்து விட்டது.
அன்று மாலை நான் கலந்துகொண்ட சிறுவர் கதை நிகழ்ச்சியில் கூடியிருந்த சிறுவர் சிறுமியர்களிடம், “உங்கள் ஊரைப்பற்றி உங்களுக்குத் தெரிந்த செய்திகளைக் கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன். முன் வந்த பல சிறுவர்கள், புராணச் செய்திகளைப்பற்றித்தான் கூறினார்களே தவிர, நான் அறிந்துகொண்ட செய்தியைக் கூறவில்லை. பிறகு, நான் அதைக் கூறியபோது அங்கிருந்த பெரியவர்களுக்குக்கூட அந்தச் செய்தி புதுமையாக இருந்ததை அறிந்து வியப்புற்றேன், தமது பெரியவர்கள் தங்கள் ஊரில் உள்ள ஆலயங்களைப்பற்றிய வரலாற்றுச் செய்திகளைவிடப் புரரணச் செய்திகளையே அதிகம் அறிந்து வைத்திருப்பது வேதனைக்குரியது.
சென்னைக்குச் சென்றதும் என்னுடைய நாவலுக்குத் தேவைப்படும் வரலாற்று ஆதாரங்களைத் தேடிப் பிடித்தேன்.
நாவலை உருவாக்கி உங்கள் முன் வைத்துள்ளேன். குழந்தைகளுக்கு வரலாற்று நாவல்கள் அதிகமில்லை என்ற குறையை, எனது முந்தைய நாவல்களைப் போல் இதுவும் தீர்த்து வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த நாவல் உருவாவதற்குப் பெரிதும் உறுதுணையாய் இருந்த செல்வி விஜயலட்சுமியின் உதவிக்கு எனது நன்றி.
எனது சிறுவர் இலக்கிய முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு எனது நன்றி.
அன்பன்
ரேவதி