சித்ராங்கதா (ஹரிதாசன் எனும் நான் – 2), திவாகர் (ChitranKatha, Divakar)

315.00

Description

நான் இந்தப் புதினத்தில் குறிப்பிட்டுள்ள ஆந்திரத்தின் அத்தனை பகுதிகளையும் நான் நேரில் சென்று பார்த்த இடங்கள்தான். அந்த அனுபவமும் நான் இந்தப் புதினத்தை எழுதுவதற்கு உதவியது.
சரித்திரத்தில் உலவிய பாத்திரமான ஜகன்மோகினி எனும் கலிங்க இளவரசியைப் பற்றி பல தகவல்கள் தெலுங்கிலும் ஆங்கிலக் குறிப்புகளிலும் மாறுபடுகின்றன. ஒரு சிலர் சித்ராங்கதா எனும் கலிங்க இளவரசியை ஜகன்மோகினியுடன் பொறுத்திப் பார்க்கிறார்கள். மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டிய இந்த விஷயத்தை இந்தப் புதினத்தில் எச்சரிக்கையை மனதில் கொண்டும் சரியான வகையில் சான்றுகள் கொடுக்கும் சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கருத்தை மனதில் கொண்டும் தெலுங்கு கவிஞர்களின் சொல்லாட்சியையும் கலந்து கொண்டு முடிந்த வரையில் இந்தப் பாத்திரங்களுக்கு நியாயம் செய்து இருப்பதாக நினைக்கிறேன்.
‘சுந்தரத் தெலுங்கிலே பாட்டிசைத்து‘ என மகாகவி பாரதி போற்றிய தெலுங்கு மொழியின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு இன்றளவிலும் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் எழுதிய ‘ஆமுக்தமால்யதா‘ எனும் காவியம்தான். இந்தக் காவியம் வந்த விதத்தை அவர் கூறிய படியேதான் இந்தப் புதினத்திலும் எழுதியுள்ளேன். ஆமுக்தமால்யதாவை மேலும் சரியாகப் புரியும் அளவுக்கு அதை ஆங்கிலத்தில் சிறப்பாக மொழி மாற்றம் செய்த டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் எழுதியதின் அடிப்படையில் மூன்று பாடல்களின் பொருளைப் புரிந்துகொண்டு தமிழ்ப் படுத்தியுள்ளேன். அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டவன்.
இந்தக் கதையை ‘தானே சொல்லும் விதமாக‘ (First person singular account) எழுதியுள்ளேன். யுத்தம் செய்வது என்பது எதிரியை வெற்றி கொள்வதற்காகத் தானே தவிர நிச்சயமாக கொலை செய்வதற்காக அல்ல எனும் நீதியைக் கதையின் அடிநாதமாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியுள்ளேன். கதையைப் படிக்கும் போது அந்தப் பதினாறாம் நூற்றாண்டு ஆரம்ப கால விஜயநகரத்தைக் கற்பனை செய்து கொண்டு அந்தக் காலக் கண்ணோட்டத்தோடு படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
– திவாகர்